இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்
இலங்கையில் நாட்டின் பல பாகங்களிலும் இன்று சனிக்கிழமை மீண்டும் அடை மழை பெய்து வருவதையடுத்து நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
களனி ஆறு உட்பட சில நீர் நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.
அண்மித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.

அதே வேளை மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நுவரெலியா , கண்டி , இரத்தினபுரி , கேகாலை மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலச்சரிவு அறிகுறிகள் காணப்பட்டால் பாதுகாப்பான இடங்களை நாடுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.
அதே வேளை மத்திய மாகாணத்தில் கண்டி , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் சிறிய அளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நிலச்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலை தோட்டத்தில் 41 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சிறுவர் பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கியுள்ளனர்
































