வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் புயல்கள் அதிகம் உருவாவது ஏன்?

பட மூலாதாரம், IMD
- எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
முரசு... அர்னாப்... ஹுத் ஹுத்... டிட்லி... மொந்தா... ஒகி... இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்!
இவை கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களின் பெயர்கள்.
இவை அனைத்துக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று நினைக்கிறீர்கள்? இவை அனைத்தும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்டவை.
ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் உருவாகும் பெரும்பாலான புயல்கள் இந்த இரண்டு மாதங்களில்தான் உருவாகின்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏன் அதிக எண்ணிக்கையிலான புயல்கள் உருவாகின்றன என்பதைக் கண்டறிய, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் (இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம்) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளிடம் பிபிசி பேசியது.
"இந்தப் புயல்கள் உருவாவதில் கடல் வெப்பநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று இன்காய்ஸ் விஞ்ஞானி பி. சிவய்யா பிபிசியிடம் தெரிவித்தார்.
1891-ஆம் ஆண்டு முதல்...
இந்திய வானிலை ஆய்வு மையம் 1891-ஆம் ஆண்டு முதல் புயல்களைக் கணக்கிடத் தொடங்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையத்திடமிருந்து பிபிசி சேகரித்த தரவுகளின்படி, 1891 முதல் 2025ஆம் ஆண்டு வரை வங்கக் கடலில் மொத்தம் 1,261 புயல்கள், தீவிரப் புயல்கள் போன்றவை உருவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை இரண்டு மாதங்களுக்குள், அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகியுள்ளன.
மேலும், இந்த இரண்டு மாதங்களில் உருவாகும் புயல்களின் தீவிரமும் அதிகமாக உள்ளது.
1891 முதல் 2025ஆம் ஆண்டு வரை வங்கக் கடலில் 541 புயல்கள் மற்றும் தீவிரப் புயல்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் 96 புயல்கள் அக்டோபரிலும், 126 புயல்கள் நவம்பரிலும் உருவாகியுள்ளன.
அதேபோல், 1891 முதல் 2025ஆம் ஆண்டு வரை 247 தீவிரப் புயல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 44 அக்டோபரிலும், 76 நவம்பரிலும் உருவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்த இரண்டு மாதங்களில் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது?
புயல்கள் உருவாவதில் கடல் வெப்பநிலை மற்றும் காற்றின் போக்குகள் முக்கியக் காரணிகளாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அமராவதி வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் கே. நாகரத்னா பிபிசியிடம் பேசுகையில், தென்மேற்குப் பருவமழை விலகிய பிறகு (பருவமழைக்குப் பிந்தைய காலம்) கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் புயல்கள் உருவாகின்றன என்று தெரிவித்தார்.
"பசிபிக் பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள், அந்தமான் கடலின் வழியாக வங்கக் கடலுக்குள் நுழைகின்றன."
’’பருவமழைக்கு முன்பு மியான்மர் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் புயல்கள் அந்தத் திசையை நோக்கி நகர்கின்றன. ஆனால், பருவமழை விலகிய பிறகு வங்கக் கடலில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருக்கும். இதனால் புயல்கள் இந்த கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்கின்றன. காற்றின் நகர்வும் இதற்குப் பங்களிக்கிறது" என்று நாகரத்னா தெரிவித்தார்.

பட மூலாதாரம், APSDMA
இந்தக் காலகட்டத்தில் வங்கக் கடலின் வெப்பநிலை சராசரியாக 26.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதே விவகாரம் குறித்து இன்காய்ஸ் விஞ்ஞானி பி. சிவய்யாவும் பிபிசியிடம் பேசினார்.
"கடல் மேற்பரப்பு வெப்பநிலை இரண்டு பருவங்களில் உச்சத்தில் பதிவாகிறது. ஒருமுறை மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும்... மீண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் இது நிகழ்கிறது," என்று பி. சிவையா கூறினார்.
பருவமழைக்குப் பிறகு குளிர்காலம் தொடங்கினாலும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைவதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது என்று அவர் கூறினார்
"இந்தச் சூழ்நிலைகள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதற்குச் சாதகமாக அமைகின்றன" என்று அவர் கூறினார்.
குறைந்த காற்றழுத்தத்திலிருந்து சூப்பர் புயல் வரை...

பட மூலாதாரம், UGC
கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறுகிறது. அந்தப் புயல் மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகிறது. பின்னர் அது சூப்பர் புயலாக மாறுகிறது.
காற்றின் வேகத்தின் அடிப்படையில் புயல்கள் வகைப்படுத்தப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது .
மணிக்கு 31 கிலோமீட்டருக்கும் குறைவான காற்றின் வேகம் கொண்ட அமைப்பு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகக் கருதப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 31 முதல் 49 கிலோமீட்டர் வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றும், மணிக்கு 50 முதல் 61 கிலோமீட்டர் வரை இருந்தால் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 88 கிலோமீட்டர் வரை இருந்தால் புயல் என்றும், மணிக்கு 89 முதல் 117 கிலோமீட்டர் வரை இருந்தால் தீவிரப் புயல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 118 முதல் 167 கிலோமீட்டர் வரை இருந்தால் மிகத் தீவிரப் புயல் என்றும், மணிக்கு 168 முதல் 221 கிலோமீட்டர் வரை இருந்தால் அதி தீவிரப் புயல் என்றும் அழைக்கப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 222 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால் அது சூப்பர் புயல் என வகைப்படுத்தப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































