அமேசான் காட்டுக்குள் மறைந்திருந்த 432 கட்டமைப்புகள் - லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த நாகரிகத்தின் தடயங்கள்

பட மூலாதாரம், Martti Pärssinen & Fabio de Novaes
- எழுதியவர், ஆண்ட்ரே பியர்நாத்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் மரங்களுக்கு அடியில் மறைந்திருந்த நூற்றுக்கணக்கான நில அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படும் ஒரு பண்டைய நாகரிகத்தால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
தரையில் தோண்டி உருவாக்கப்பட்ட இந்தப் பிரமாண்டமான கட்டமைப்புகள் 'ஜியோகிளிஃப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய ஆறுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியில் கட்டப்பட்டவை.
"கிரேக்கத்தில் பித்தகோரஸ் தனது தேற்றத்தை உருவாக்கிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அமேசானில் இந்த மக்கள் பிரமாண்டமான வடிவியல் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தனர்," என்று அமேசான் ஜியோகிளிஃப்ஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான தொல்லுயிரியலாளர் அல்சியூ ரான்ஸி கூறுகிறார்.
கடந்த காலத்தை ஆராய்தல்
சமீபத்தில் நேச்சர் இதழில் வெளியான இந்த ஆய்வு, ஸ்பெயின், பின்லாந்து, பிரேசில் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
அடர்ந்த வனப்பகுதியின் மரக்கூரைகளை, லிடார் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர்.
லேசர் கதிர்களைப் பயன்படுத்தி தொலைவுகளை அளவிட்டு, சிக்கலான முப்பரிமாண வரைபடங்களை உருவாக்குவதே இந்தத் தொழில்நுட்பமாகும்.
இதன் மூலம், தாவரங்களை அகற்றாமலும் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாகச் செல்லாமலும் பெரிய நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய முடியும்.

பட மூலாதாரம், Martti Pärssinen
"அமேசானில் மேற்கொள்ளப்பட்ட முதல் மிகப்பெரிய லிடார் ஆய்வு இதுதான்," என்று ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர், மானுடவியலாளர் மற்றும் இந்த ஆய்வின் இணை ஆசிரியரான மார்ட்டி பார்சினென் கூறுகிறார்.
4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில் 432 ஜியோகிளிஃப்ஸை அவர்கள் அடையாளம் கண்டனர். அவற்றில் பெரும்பாலானவை இதுவரை பதிவுசெய்யப்படாதவை. இவை கி.மு. 600 முதல் கி.பி. 850 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.
இந்தக் கட்டமைப்புகளை உருவாக்கிய 'அக்விரி நாகரிகம்', சுமார் 1,83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இது கம்போடியா அல்லது சிரியாவின் பரப்பளவுக்குச் சமமானதாகும். கி.பி. 100 முதல் 300 வரையிலான காலகட்டத்தில், இந்த நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோது 30 லட்சம் மக்கள் வரை வாழ்ந்திருக்கலாம்.
15 மீட்டர் அகலமும் 5 மீட்டர் ஆழமும் கொண்ட அகழிகளை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்ததாக ரான்ஸி கூறுகிறார்.
இத்தகைய பிரமாண்டமான கட்டமைப்புகள், பெரிய சமூகங்கள் ஒன்றிணைந்து பணியாற்றியிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
"இந்தப் பகுதியில் கற்கள் கிடையாது. அவர்கள் மரத்தாலான கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். மண்ணைக் கூடைகளில் எடுத்துச் சென்றிருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், அமேசானின் ஈரப்பதமான காலநிலை காரணமாக இயற்கைப் பொருள்கள் விரைவாகச் சிதைந்துவிடுகின்றன. இதனால், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து உறுதியாகத் தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
பெரிய அளவிலான தொழிலாளர்கள் தேவைப்பட்டதுடன், பணிகளைப் பிரித்துச் செய்வதும் அவசியமாக இருந்திருக்கும். இதற்கு கணிதம் மற்றும் வடிவியல் குறித்த கணிசமான அறிவும் தேவைப்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவை எதற்காக இருந்தன?
இந்த ஜியோகிளிஃப்கள் ஒரு காலத்தில் கோட்டைகளாகவோ அல்லது படையெடுப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் தற்காப்புக் கட்டமைப்புகளாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

பட மூலாதாரம், Rhuan Lopes
ஆனால், தற்போது வல்லுநர்கள் இவை பெரும்பாலும் சடங்கு மற்றும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
அதாவது, மக்கள் நிரந்தரமாக வசிக்கும் இடங்களாக இல்லாமல், ஒன்றுகூடும் இடங்களாக இவை இருந்திருக்கலாம்.
"இது உறுதிப்படுத்தப்பட்டால், இந்த மக்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய ஜியோகிளிஃப்களை உருவாக்குவதற்காக இவ்வளவு முயற்சியையும் உழைப்பையும் செலவிட்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் கவலைப்பட வேண்டிய அளவுக்கு உடனடி எதிரிகள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை," என்று ரான்ஸி ஊகிக்கிறார்.
அக்விரி நாகரிகம் குறித்த மற்றொரு முடிவையும் பார்சினென் சுட்டிக்காட்டுகிறார்.
அது இயற்கையின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழமான மரியாதை ஆகும்.
"அவர்கள் மழைக்காடுகளை ஒருபோதும் சவன்னா புல்வெளிகளாக மாற்றவில்லை. தங்களது வாழ்க்கை முறையைத் தொடர்வதற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே வனப்பகுதிகளை அழித்தும் மரங்களை வெட்டியும் இருக்கிறார்கள். மக்காச்சோளம், பூசணி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டிருக்கிறார்கள். அதற்கு மேல் எதையும் செய்யவில்லை" என்று அவர் கூறுகிறார்.
இந்தக் கட்டமைப்புகள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன என்பதை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன.
"இந்தக் கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமே அவர்களது பணியாக இருக்கவில்லை. பல நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்துள்ளனர். இதற்கு நிச்சயமாகத் திரட்டப்பட்ட அறிவின் தொகுப்பு தேவைப்பட்டிருக்கும்" என்று பிரேசிலின் பாரா மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் மானுடவியலாளரும், இந்த ஆய்வின் மற்றொரு இணை ஆசிரியருமான ருவான் கார்லோஸ் லோப்ஸ் கூறுகிறார்.
ரான்ஸியின் கூற்றுப்படி, இந்த ஜியோகிளிஃப்கள் காட்டுக்குள் தனித்தனியாக மறைந்திருந்த கட்டமைப்புகள் அல்ல. அவை ஒன்றோடொன்று நன்கு இணைக்கப்பட்டிருந்தன.
"ஜியோகிளிஃப்களை இணைக்கும் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை நாங்கள் வரைபடமாகப் பதிவு செய்தோம். இந்தச் சாலைகள் அந்தக் கட்டமைப்புகள் அமைந்திருந்த இடங்களுக்குச் சென்றன. மேலும், அந்தக் கட்டமைப்புகளை நெருங்க நெருங்கச் சாலைகளின் அகலம் அதிகரித்தது" என்று அவர் விளக்குகிறார்.

பட மூலாதாரம், Martti Pärssinen, Risto Kalliola & Fabio de Novaes
ரான்ஸியின் கூற்றுப்படி, இந்த ஜியோகிளிஃப்கள் காட்டுக்குள் தனித்தனியாக மறைந்திருந்த கட்டமைப்புகள் அல்ல. அவை ஒன்றோடொன்று நன்கு இணைக்கப்பட்டிருந்தன.
"ஜியோகிளிஃப்களை இணைக்கும் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை நாங்கள் வரைபடமாகப் பதிவு செய்தோம். இந்தச் சாலைகள் அந்தக் கட்டமைப்புகள் அமைந்திருந்த இடங்களுக்குச் சென்றன. மேலும், அந்தக் கட்டமைப்புகளை நெருங்க நெருங்கச் சாலைகளின் அகலம் அதிகரித்தது" என்று அவர் விளக்குகிறார்.
முடிவு
தங்களது ஆய்வின்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனித்தனர். ஜியோகிளிஃப்களை உருவாக்கும் பணி கி.பி. 850ஆம் ஆண்டுவாக்கில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய மையங்கள் இதே காலகட்டத்தில் கைவிடப்பட்ட மாயன் நாகரிகத்துடன் இதை ரான்ஸி ஒப்பிடுகிறார்.
"மாயன் மக்கள் தங்களது அரண்மனைகளைக் கட்டுவதையும் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டனர். யுகடான் பகுதியின் பிரமிடுகள் மீண்டும் காடுகளால் சூழப்பட்டன" என்று அவர் குறிப்பிடுகிறார்.
"அமேசானிலும் இதேபோன்ற ஒன்று நடந்தது. ஒன்பதாம் நூற்றாண்டு என்பது பரந்த அளவிலான சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்பட்ட காலகட்டமாக இருந்திருக்கலாம்."
எப்படியிருந்தாலும், இந்த ஆய்வு உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய ஆராய்ச்சிகள், அமேசான் மழைக்காடுகள் மனிதர்கள் வாழாத, அவர்களின் செயல்பாடுகளால் பாதிக்கப்படாத வனப்பகுதியாக இருந்தன என்ற நீண்டகால நம்பிக்கையைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Martti Pärssinen
கடந்த சில தசாப்தங்களாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வுகள், ஐரோப்பியர்கள் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே லட்சக்கணக்கான மக்கள் இங்கு வாழ்ந்ததையும், உலகின் மிகப்பெரிய வெப்பமண்டலக் காடுகளின் அமைப்பு மற்றும் இயல்பில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தியதையும் காட்டியுள்ளன.
"அமேசானில் நாம் காண்பது பரந்த இயற்கைக் காடு அல்ல. மாறாக, மனிதச் செயல்பாடுகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு பரந்த வரலாற்றுத் தோட்டம்," என்று லோப்ஸ் குறிப்பிடுகிறார்.
காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஆரம்பகால ஆய்வுகள், ஒட்டுமொத்த அமேசான் பகுதியிலும் 10 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்தன. பின்னர் வெளியான மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை உயர்த்தின.
தற்போது, ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பிலேயே 30 லட்சம் பேர் வரை வாழ்ந்திருக்க முடியும் என்றால், இந்த மதிப்பீடுகள் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டியிருக்கலாம்.
அமேசான் பகுதி மக்களின் வாழ்க்கை முறை குறித்த மற்றொரு முந்தைய அனுமானம் என்னவென்றால், உணவு வளங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய பெரிய ஆறுகளின் கரைகளிலேயே அவர்கள் பெரும்பாலும் வாழ்ந்தனர் என்பதாகும்.
ஆனால், ஜியோகிளிஃப்கள் பெரும்பாலும் ஆறுகளுக்கு இடையிலுள்ள மேட்டுப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன.
இந்தப் புதிய ஆய்வு, காடுகளின் இயல்பை மாற்றியமைக்கவும் பயிர்களைச் சாகுபடி செய்யவும் திறன் கொண்ட பெரிய மக்கள்தொகையினர் இந்தப் பகுதிகளிலும் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.
"மீன்கள் அதிகம் கிடைக்கும், படகுகள் மூலம் எளிதாகப் பயணம் செய்யக்கூடிய பெரிய ஆறுகளின் கரைகளில் மட்டுமே இந்த மக்கள் வாழவில்லை. நிலப்பரப்பை அவர்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தனர். ஆறுகளிலிருந்து வெகு தொலைவில் குடியேறி, இந்தச் சாலைகள் வழியாக நடந்தே பயணித்தனர்" என்று ரான்ஸி கூறுகிறார்.
"இது அமேசான் பகுதியில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது குறித்த நமது புரிதலையே முற்றிலுமாக மாற்றுகிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































