மீனவர் பிரச்சனை உட்பட பல விஷயங்கள் குறித்து மைத்திரி-மோடி பேச்சு

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவும் நரேந்திர மோடியும் டில்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

மைத்திரி மோடிக்கிடையிலான நேற்றைய சந்திப்பின்போது
படக்குறிப்பு, மைத்திரி மோடிக்கிடையிலான நேற்றைய சந்திப்பின்போது

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடியை டில்லயிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன்போது மீனவர்கள் பிரச்சனை, வர்த்தகம், பிராந்திய பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார் எனவும் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் கூறுகிறது.

மீனவர் பிரச்சினைக்கு விரைவாக நிரந்தரமான தீர்வை எட்டுவது மிகவும் முக்கியமானது என்றும் அது காலத்தின் தேவை என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார் எனவும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்திய அரசு வழங்கி வரும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நன்றியை பிரமர் மோடியிடம் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்குமிடையில் கடந்த 15 மாதக் காலப்பகுதியில் நடந்த, ஆறாவது சந்திப்பு இதுவென ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயமாக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உஜ்ஜெயின் பகுதியில் நடைபெற்றுவரும் கும்பமேளா மத நிகழ்விலும் பங்குபெற்றார்.