நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி: டக்ளஸ் அறிவிப்பு

பட மூலாதாரம், epdpnews
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடும் என அதன் தலைமைச் செயலர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த ஈபிடிபி கட்சி, அதில் இணைந்து போட்டியிடாமல், தமது சொந்த சின்னமான வீணைச் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே தனித்து போட்டியிடும் முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை கொழும்பு சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்தித்து அவர்களிடம் தனித்துப் போட்டியிடும் முடிவையும் அதற்கான காரணங்களையும் தெரிவித்ததாகவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி வடகிழக்குப் பகுதியில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாகவும், வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தமது வேட்பு மனுக்களை சமர்பிப்பார்கள் எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.




























