யாழ்ப்பாணத்தில் மிருக பலியை எதிர்த்து உண்ணாவிரதம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிங்கர் வைரவர் ஆலயத்தில் மிருக பலி கொடுக்கக் கூடாது எனக் கோரி அடையாள உண்ணாவிரதம் ஒன்று தெல்லிப்பழையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த ஆலயத்தில் சனிக்கிழமை அதிகாலை வேள்வி நடைபெறவுள்ள நிலையில், அறவழிப் போராட்டக்குழு என்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. ஆயினும் தமது ஆலயத்தில் வழமைபோல நாளை ஆடுகளும் கோழிகளும் வேள்வியாக அறுக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருக்கின்றனர். ஆலயங்களில் மூடநம்பிக்கையின் அடிப்படையில் வேள்வி என்ற பெயரில் மிருக பலி கொடுப்பவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காகத் தாங்கள் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருவதாக, உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அறவழி போராட்ட குழுவின் நிறுவனராகிய மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார். கவுணாவத்தை நரசிங்கர் ஆலயத்தின் மிருகபலி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட மறுத்த அவர், மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காகக் கடிதங்கள் எழுதியதாகவும், நேரடியாகப் பேசியதாகவும், சட்ட விதிமுறைகள், ஆகம விதிமுறைகள் என்பன பற்றிய விளக்கம் அளித்திருக்கும் தொடர் நடவடிக்கையாகவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்த கவுணாவத்தை நரசிங்கர் ஆலயத்தில் மிருகபலி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், உரிய உள்ளூரட்சி மன்றங்களின் சட்டவிதிகளை மீறாத வகையில் தேவையான அனுமதியைப் பெற்று வேள்வியை நடத்தலாம் என்று புதனன்று உத்தரவிட்டிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கின்றனர். சுமார் முன்னூறு ஆண்டுகளாக இந்த வேள்வி நடைபெற்று வருவதாகத் தெரிவித்த கவுணாவத்தை நரசிங்கர் ஆலய நிர்வாக சபையின் செயலாளர் சின்னத்துரை சுப்பிரமணியம், மிருகபலி கொடுக்கக் கூடாது என்றிருந்தால், அதனை அந்தக் காலத்திலேயே பெரியவர்கள் தடுத்து நிறுத்தியிருப்பார்கள் எனக் கூறினார். தமது ஆலயத்தைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இந்த மிருகபலி வேள்வியை நம்பிக்கையோடு மேற்கொண்டு வருவதனால், மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அதனை அவர்களே ஏற்படுத்த வேண்டுமேயொழிய வெளியார் அதனைச் செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.


























