இலங்கையில் சில பகுதி முஸ்லிம்கள் இன்று பெருநாள் கொண்டாடுகின்றனர்

ஏறாவூர், காத்தான்குடி, கிண்ணியா, கல்முனை உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது
படக்குறிப்பு, ஏறாவூர், காத்தான்குடி, கிண்ணியா, கல்முனை உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் இன்று பெருநாள் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் இஸ்லாமிய ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் ரம்ழான் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்-இய்யதுல் உலமா சபையும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரும் விடுத்துள்ள அறிவிப்புகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இந்த சர்ச்சைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நேற்று புதன் கிழமை இரவு தமது பிரதேசத்தில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதாகவும், அதனை தாங்கள் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபைக்கு அறிவித்திருந்ததாகவும் கிண்ணியா பிரதேச ஜம்-இய்யத்துல் உலமா சபை கூறுகின்றது.

ஆனால் அதனை நிராகரித்துள்ள அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை நேற்று கொழும்பில் கூடி, நாட்டில் எந்தவொரு பகுதியிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை நேற்று புதன் கிழமை தென்படவில்லை என முஸ்லிம்களுக்கு அறிவித்துள்ளது.

தொடர்ந்து இன்றும் நோன்பு அனுஷ்டித்து நாளை வெள்ளிக்கிழமை ரம்ழான் பண்டிகையை கொண்டாடுமாறு தனது அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தது.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் இந்த தீர்மானத்ததை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் நிராகரித்து இன்று ரம்ழான் பண்டிகையை கொண்டாடுமாறு முஸ்லிம்களுக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை, கிண்ணியா பிரதேச ஜம் இய்யத்துல் உலமா சபையும் தமது பிரதேச முஸ்லிம்களுக்கு இதுபோன்ற அறிவித்தலொன்றை விடுத்திருந்தது.

குறித்த அறிவித்தல் காரணமாக காத்தானகுடி, ஏறாவூர், கிண்ணியா, கல்முனை , பேருவளை உட்பட இலங்கை பல பாகங்களிலும் இன்று காலை நோன்பு பெருநாள் தொழுகைகள் தொழுகைகள் நடை பெற்றன.

பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் கலந்து கொண்டார்கள்.

இன்று பெருநாள் கொண்டாடாத முஸ்லிம்கள் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றார்கள்.