ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை களமிறக்க ததேகூ முடிவு

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரை வட மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கும் முடிவு தொடர்பில் கட்சிக்குள் நீண்ட விவாதங்கள் நடந்துவந்ததாக தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் சிவி. விக்னேஸ்வரனை களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் சற்றுமுன்னர் முடிவடைந்த கூட்டத்தின்போது, கூட்டமைப்பின் 5 பங்காளிக் கட்சிகளும் ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் ஏனைய பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனையா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவையா முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் நீண்ட விவாதங்கள் நடந்துவருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது.