'கொழும்பில் வெளிநாட்டு முதலீட்டில் பெரும் கசினோ'

இலங்கையின் தலைநகர் கொழும்பில் 400 அறைகளைக்கொண்ட கசினோ எனப்படும் சூதாட்ட விடுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவின் முன்னணி கசினோ முதலீட்டாளரான ஜேம்ஸ் பக்கர் என்பவரின் நிறுவனமே இதற்கான முக்கிய முதலீட்டை செய்யவுள்ளது.
இது குறித்து நிதியமைச்சின் தலைமை இயக்குனரால், முதலீட்டுச் சபையின் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றை ஆதாரம் காண்பித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பியுள்ளார்.

அரசாங்க விநியோக திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் அமைய இருக்கும் இந்த கசினோவுக்கு, 10 வருடங்களுக்கு பெருவணிக வருமான வரி விலக்கு வழங்கப்படுவதுடன், ஏனைய பல சலுகைகளும் வழங்கப்படவுள்ளதாக அந்தக் கடிதம் குறிப்பிடுவதாகவும் அவர் கூறினார்.
அது நாட்டுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷமன் யாப்ப அபேவர்த்தன அவர்கள், 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் செய்யப்படுகின்ற இந்த வணிகம், நேரடியாக 2600 பேருக்கு தொழில்வாய்ப்பையும் வழங்கவிருப்பதாகக் கூறினார். அத்துடன் மறைமுகமான பல தொழில்வாய்ப்புக்களையும் அது ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
''இந்த நிறுவனம் இலங்கைச் சட்டங்களின் அடிப்படையில்தான் கட்டுப்படுத்தப்படவுள்ளது. 45 வீதமான இந்த நிறுவன பங்குகள் உள்ளூர் வணிகர்களுக்கு உரியது. வரி விலக்கு வழங்குவது என்பது அனைத்து வெளிநாட்டு முதலீடுகளுடன் தொடர்புடைய வணிகங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே இந்த நிறுவனத்துக்கு வரி விலக்கில் எந்த விதமான சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை.'' என்றார் அமைச்சர் லக்ஷமன் யாப்ப அபேவர்த்தன.
இதில் கசினோ வணிகம் மாத்திரமல்லாமல், 400 ஹொட்டல் அறைகளும், சில்லறை கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், உணவு விடுதிகள் மற்றும் கூட்டங்களை , நிகழ்வுகளை நடத்துவதற்கான வசதிகளும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கையாகவே முதலீட்டுச் சபை இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2016ஆம் ஆண்டளவில் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 200 கோடி அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டை தாம் இலக்கு வைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
































