இலங்கை விளையாட்டு வீரர்கள் மீது கெடுபிடிகள்

பட மூலாதாரம், airforce.lk
இலங்கையின் தேசிய அணிக்கு விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு வீரர் அழைக்கப்படும் போது, அவர் அந்த அழைப்பை ஏற்று வராமல் இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு அவர் மீது தடை விதிக்க அரசு உத்தேசித்து வருவதாக அந்நாட்டின் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது.
கிரிக்கெட், கால்பந்து, ரக்பி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் இது பொருந்தும்.
தேசிய அணிக்கு விளையாடும்படி ஒரு வீரர் அழைக்கப்படும் போது, ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் ஏதும் இல்லாமல், அவர் வர மறுத்தால் அவர் மீது இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் எமது கொழும்புச் செய்தியாளர் சார்லஸ் ஹவிலாண்டிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளங்களை பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் நாட்டுக்காக விளையாட அழைக்கப்படும் போது வராமல் இருப்பது சரியல்ல என்றும் அவர்கள் தேசிய அணிக்கு விளையாட வரவேண்டும் எனவும் அமைச்சர் அளுத்கமக வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்குள் விளையாடப்படும் எல்லாப் போட்டிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
இலங்கையில் ரக்பி விளையாட்டு இந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், slrfu
இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ நாட்டின் ரக்பி அணியின் தலைவராக இந்த ஆண்டின் முற்பகுதியில் நியமிக்கப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
யோஷித இலங்கை ரக்பி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அணியின் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் தேசிய அணியிலிருந்து வெளியேறி, நியுசிலாந்தில் விளையாடச் சென்றனர்.
அப்படிச் சென்றவர்களை யோஷித ராஜபக்ஷ தேசத் துரோகிகள் என்று கூறியிருந்தார்.
எனினும் அரசு கொண்டு வரும் தடையானது எதிர்காலத்தில் தேசிய அணிக்கு ஆட மறுக்கும் வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் இலங்கையின் விளையாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஐ பி எல் போட்டிகளில் பங்கு பெறுவதன் காரணமாக தேசிய அணிக்கு தாமதமாகவே வந்துள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.
தற்போது அரசு கொண்டு வரும் தடையானது தேசமே முதன்மையானது என்பதை வலியுறுத்தும் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ள கிரிகெட் வீரர்கள் தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே ஆக வேண்டும் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அளுத்கமக தெரிவித்துள்ளார்.






























