ஒட்டுக்கேட்பு சர்ச்சைக்கு மத்தியில் நியுசிலாந்திடம் ரக்பி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோல்வி

பிரசுரிக்கப்பட்டது

நியுசிலாந்து ரக்பி அணி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில், ஆஸ்திரேலிய ரக்பி அணி மீண்டும் தோல்வியடைந்தது.

நியுசிலாந்திற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிளிடிஸ்லேய் கோப்பைக்கான ரக்பி விளையாட்டு தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சனிக்கிழமை நடந்தது.

இந்த கருவியை அறையில் யார் வைத்தார்கள், ஏன் வைத்தார்கள் என்பது பற்றி எந்த அறிகுறியும் இல்லை.

ஆஸ்திரேலிய ரக்பி உரிமையாளர்கள், இந்த நிகழ்வில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய அணியான த வால்லபீஸூக்கு எதிராக விளையாடுவதற்காக சிட்னியில் ஆல் பிளேக்ஸ் அணி தங்கியிருந்த அறையில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டபோது இந்தக் கருவி இருந்தது கண்டறியப்பட்டது.

நியுசிலாந்து ஹெரால்டு செய்தித்தாளில் வெளியான அறிக்கையின்படி, அந்த கருவி இருக்கை ஒன்றின் பஞ்சுக்குள் தைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கருவி மூலம் எந்தத் தகவல் சேகரிக்கப்பட்டிருந்தாலும் அது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

அவர்கள் 8 - 42 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.

இதுகுறித்து பிபிசி செய்தியாளர் கூறுகையில், ஒட்டுக்கேட்கும் கருவியை பொருத்தியது, விளையாட்டின் பேரில் பந்தயம் நடத்துபவர்கள் வேலையாக இருக்கலாம் என்ற யூகிக்கப்படுகிறது.