உலகத் தடகளப் போட்டி : கென்யா முன்னிலையில்

பிரசுரிக்கப்பட்டது

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் உலகத் தடகளப் போட்டிகளின் ஏழாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் கென்யா முதலிடம் வகிக்கிறது.

ஹொங் லியு
படக்குறிப்பு, ஹொங் லியு

கென்யா இதுவரை 6 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் ஆகியப் பதக்கங்களை வென்றுள்ளது.

அமெரிக்கா மொத்தமாக 14 பதக்கங்களை வென்றிருந்தாலும், நான்கு தங்கப் பதக்கங்களே இதுவரை அதற்கு கிடைத்துள்ளதால், பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அது உள்ளது.

மூன்றாவது இடத்தில் 4 தங்கங்களுடன் ஜமைக்கா உள்ளது. இதில் இரண்டை உசைன் போல்ட் வென்றுள்ளார்.

இப்போட்டியில் ஏழாம் நாளான இன்று ஐந்து தங்கப் பதக்கங்கள் முடிவாயின. முதலாவதாக காலையில் நடைபெற்ற மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை சீன வீராங்கனைகள் பெற்றனர். ஹொங் லியு தங்கமும் ஷிசி லு வெள்ளியும் பெற்றனர்.

மகளிருக்கான நீளம் தாண்டும் போட்டியில் அமெரிக்காவின் டியன்னா பார்ட்டோலெட்டா 7.14 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.

இன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டி மகளிருக்கான 200மீட்டர் ஒட்டம். அதில் கடைசி சில மீட்டர்களில் முந்தி நெதர்லாந்தில் டெவ்னே சிப்பர்ஸ் முதலிடத்தை பெற்றார். அவருக்கும், அடுத்து வந்த ஜமைக்காவின் எலைனே தோம்ஸனுக்கும் இடையில் 0.03 நொடிகளே வித்தியாசம். இந்தப் போட்டியில் ஜமைக்காவின் வெரோனிக்கா காம்ப்பெல் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றவர் ரஷ்யாவின் சேர்ஜி சுபன்கோவ். வெள்ளிப் பதக்கம் ஜமைக்காவின் ஹன்ஸ்ல் பரச்மெண்டுக்கு கிடைத்த்து. அமெரிக்கரான அரிஸ் மெர்ரிட் மூன்றாம் இடம் பெற்றார்.

மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் போட்டி மிக மிக நெருக்கமாக இருந்தது. ஆனால் ஜமைக்காவின் டனியேல் வில்லியம்ஸ் கடைசி ஒரு மீட்டரில் முந்தி 12.57 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இரண்டாவது இடத்தில் வந்த ஜெர்மனிய வீராங்கனை சிண்டி றொலெடெர் எடுத்துக் கொண்ட நேரம் 12.59 நொடிகள்.