கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகத் தொடர ஸ்ரீநிவாசனின் மனு தள்ளுபடி

ஸ்ரீநிவாசன் மனு தள்ளுபடி
படக்குறிப்பு, ஸ்ரீநிவாசன் மனு தள்ளுபடி
பிரசுரிக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஐபிஎல் செயல்பாடுகள் அல்லாத மற்ற வழக்கமான செயல்பாடுகள் தொடர்பில் பிசிசிஐயின் தலைவராகத் மீண்டும் தன் பணியை தொடர்வதற்கு அனுமதி கோரி அதன் முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு, தடைவிதித்த அமர்விடமே முறையிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.

‘இந்த மனுவின் விசாரணையை நாங்கள் ஏற்க மாட்டோம். மற்ற அமர்வுகள் அளித்த தீர்ப்புகளை மாற்றுவதற்கு நாங்கள் இங்கு இல்லை. அந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி பட்நாயக் இந்த ஊரில் தான் உள்ளார். அவரிடமே முறையிடுங்கள்’, என்று இந்த மனுவை விசாரிக்கும் போது நீதிபதி பி.எஸ். சௌஹன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் ஆட்ட தொடர்பில் போட்டிகளின் மீது சட்டவிரோதமான வகையில் பந்தயம் கட்டுதல், முடிவுகளை நிர்ணயிக்கும் வகையில் தில்லுமுல்லுகள் செய்தல் போன்ற முறைகேடுகள் தொடர்பில் நடந்துவரும் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த பிசிசிஐ-யின் அப்போதைய தலைவர் ஸ்ரீநிவாசன் தன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது.

அதையடுத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தும் குழுவுக்கு தற்காலிகத் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் செயல்படுவார் என்று இந்திய உச்ச நீதிமன்றம் மார்ச் 28ஆம் தேதி அன்று உத்தரவிட்டிருந்தது.

பிசிசிஐயின் இதர நடவடிக்கைகளை அதன் மூத்த துணைத்தலைவரான ஷிவ்லால் யாதவ் மேற்கொள்வார் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து தன்னை உச்சநீதிமன்றம் நீக்கியது குறித்து ஸ்ரீநிவாசன் கேள்வி எழுப்பி தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீநிவாசனுக்கு எந்தவிதமான நிவாரணமும் அளிக்க மறுத்துவிட்டது.

மீண்டும் தலைவராக அனுமதி கோரி மனு

இதன் பின்னணியிலேயே நேற்று புதன்கிழமையன்று ஸ்ரீநிவாசன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தலைவராகத் மீண்டும் பணியை தொடர்வதற்கு அனுமதி கோரும் மனுவை மூத்த வழக்கறிஞர் நாகேந்திர மூலம் அவர் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றி, தன்னை பிசிசிஐயின் ஐபிஎல் தொடர்பிலான செயல்பாடுகள் அல்லாத மற்ற வழக்கமான செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

மேலும், ஐபிஎல் ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களாக கூறப்படும் விளையாட்டு வீரர்கள் இந்த 2014 ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாத நிலையில், ஏன் தான் மட்டும் தலைவராக செயல்ப்படுவதிலிருந்து விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்கொள்ளவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.