டொனால்ட் ட்ரம்பின் பிரசார மேலாளர் விலகல்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் பிரசார மேலாளர் பால் மனஃபோர்டு பதவி விலகியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், அறிக்கை ஒன்றில் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரசார மேலாளராகப் பதவியேற்ற இரண்டு மாதங்களில் மனஃபோர்டு பதவி விலகியுள்ளார்.

ரஷ்ய நலன்கள் மீது அவர் காட்டிய ஈடுபாடு மற்றும் யுக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சுடன் தொடர்பு ஆகிய காரணங்களால் அவர் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

அவர் வெளியேறியதற்கான காரணம் தெளிவாகவில்லை. ஆனால், இன்று அவர் பதவி விலகுவாத தெரிவித்ததை தான் ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த சில வாரங்களாக அமெரிக்க வாக்காளர்களிடேயே ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வந்தது. இந்த வாரத் துவக்கத்தில், ட்ரம்பின் பிரசார அணியில் இரண்டு மூத்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அது, மனஃபோர்டை பதவியிறக்கம் செய்யும் சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.

இதனிடையே, யுக்ரைனில் பதவியில் இருந்து இறக்கப்பட்ட அதிபர் விக்டர் யனுகோவிச்சின் கட்சி, பால் மனஃபோர்டுக்கு கொடுத்த ரகசிய பணப்பட்டுவாடா குறித்த தகவல்களை, யுக்ரைன் தேசிய ஊழல் ஒழிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் பிரசாரத்துக்காக அந்தத் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கிடையில் 12 மில்லியன் டாலருக்கு மேல் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

யுக்ரைனில் அரசியல் ஆலோசகராக செயல்பட்டதாக ஒப்புக்கொண்ட மனஃபோர்டு, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்று தெரிவித்துள்ளார்.

பட்டியலில் வெளியானபடி, அவர் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை.