தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை
தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சந்திக்கின்றன.
இந்த நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகள் ஆகியவை குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துப் பேசப்பட்டதாகவும் இது போல மேலும் சில சந்திப்புகள் நடக்குமென்றும் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும் தெரிவித்தார்.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ஏற்கனவே 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
































