இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் சிங்
இந்தியாவில் தேசவிரோத சக்திகளுக்கு எதிராக போராடவும், தேசத்தின் ஒற்றுமையை காத்திடவும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AP
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் விட்டுவைக்கப்படமாட்டர்கள் என்று ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடப்பதாக அவர் கூறும் தேசவிரோத போராட்டங்களின் பின்புலத்தில், லஷ்கர்-இ-தயீபா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் சையத் செயல்படுவதாகவும் ராஜ்நாத் சிங் இன்று ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் கைதாகியுள்ள மாணவர் அமைப்பின் தலைவர் கண்ஹையா குமார் மீது தேசத்துரோக குற்ற வழக்கு பதியப்பட்ட பின்னர், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, அந்தப் பல்கலைகழகத்திற்கு சென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் குரல்களை ஒடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவர்கள்தான் தேசவிரோதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாஜகவின் மாணவ அமைப்பு பிரதிநிதகள், ராகுல் காந்திக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூட தம்மிடம், கைதாகியுள்ள மாணவரை விடுவிக்க வேண்டும் என கோரியதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம்தான் அது தொடர்பான முடிவை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.




























