'சுவாமியின் உதவியுடன் பாஜகவுக்கு பதில் கூறுவேன்': கீர்த்தி ஆஸாத்

கீர்த்தி ஆஸாத்
படக்குறிப்பு, கீர்த்தி ஆஸாத்
பிரசுரிக்கப்பட்டது

பாஜக தம்மிடம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, சுப்பிரமணியன் சுவாமியின் உதவியுடன் பதிலளிக்க உள்ளதாக கீர்த்தி ஆஸாத் தெரிவித்துள்ளார்.

கட்சி-விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கீர்த்தி ஆஸாத்தை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக நேற்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆஸாத், தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை தமக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

'என்னை பின்னாலிருந்து தாக்க என்ன காரணம் உள்ளது... ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பேசுவதை குற்றம் என்று கூறுவது முறையா' என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றிருந்த நிலையில், இந்த விவகாரம் நடந்துள்ளது.

பிகார் மாநிலத்தின் தர்பங்கா மக்களவைத் தொகுதி உறுப்பினரான கீர்த்தி ஆஸாத் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கூறியிருந்தது.

ஆனால், அவர் செய்த கட்சி-விரோத நடவடிக்கைகள் என்ன என்பது போன்ற விளக்கங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.

எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆஸாத், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தாக்கிப் பேசியதும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதும் தான் அவர் மீது பாஜக எடுத்துள்ள நடவடிக்கைக்கு காரணம் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.