மராட்டியத்தில் நடன விடுதிகளுக்கு எதிரான சட்டத்துக்கு தடை

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நடன விடுதிகளை முடக்க ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த இது தொடர்பான சட்டத்திருத்தம் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதில் மும்பை நகரம் உள்ளிட்ட மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள நட்சத்திர விடுதிகள், உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கும் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்த தொழில் ஈடுபட்டு வருவோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆயிரக்கணக்கான நடன பெண்கள் உள்ளிட்டோர் மாநில அரசுக்கு எதிராக போராடி வந்தனர்.
ஏற்கனவே கடந்த 2005 ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து நடன விடுதிகளைத் தடை செய்திருந்தது.
அப்போது மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அது தொடர்பான வழக்கிலும் அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்றே தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் மாநிலத்திலுள்ள உயர்மட்ட நட்சத்திர விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும் போது, கீழ் நிலையில் உள்ள விடுதிகளில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தீர்ப்பை எதிர்த்து மராட்டிய மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அல்தமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகும் எனத் தீர்ப்பளித்தது.
அந்த குறிப்பிட்ட தீர்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்பட்ட காரணத்தை கணக்கில் கொண்ட மராட்டிய மாநில அரசு, பின்னர் 2014 ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சட்டத்திருத்தத்தின் மூலம், முழுமையான தடையை விதித்தது. இதன் காரணமாக நடன தொழில் ஈடுபட்டு வந்தோர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
தற்போது உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்த தீர்ப்பின் காரணமாக, மீண்டும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உல்லாச நடன விடுதிகள் துவக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
இருந்தபோதும் நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கே பாலியல் தொழில் நடத்தப்படுவதால், சமூக சீர்கேடுகளுக்கு அது வழி வகுக்கின்றன என மராட்டிய மாநில அரசு வாதிட்டு வருகிறது.
அதே சமயத்தில் இன்று இது குறித்து கருத்து கூறியுள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நீதிமன்ற உத்தரவு மதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் தேவையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மது மற்றும் உணவு விடுதிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
































