தமிழக டிஎஸ்பி தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

பிரசுரிக்கப்பட்டது

திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியின் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
படக்குறிப்பு, காவல்துறை அதிகாரியின் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் திருச்செங்கோட்டின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த விஷ்ணுபிரியா நேற்று பிற்பகலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய கோகுல் ராஜ் என்ற வாலிபரின் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளை விஷ்ணுபிரியா விசாரித்து வந்த நிலையில், அவரது இந்த மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, கோகுல் ராஜ் வழக்கில் கொடுக்கப்பட்ட அழுத்ததின் காரணமாகவே தன் மகள் இறந்ததாகக் கூறினார்.

இதனிடையே, கோகுல்ராஜ் கொலை விசாரணைக்கும், விஷ்ணுப்ரியாவின் தற்கொலைக்கும் தொடர்பில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்கொலைக்கு முன்பாக விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அதில் கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும், தனது தற்கொலைக்கும் தொடர்பில்லை என விஷ்ணுப்பிரியா குறிப்பிட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக மேற்கு மண்டல ஐ.ஜியின் கருத்தைப் பெற பல முறை முயன்றும் அவர் பதிலளிக்க முன்வரவில்லை.

விஷ்ணுப்ரியாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.