சென்னை ஐ ஐ டிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ ஐ டி யின் சென்னை மையத்தில் ஒரு பிரிவு மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையேயான மோதல் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.

சென்னை ஐ ஐ டி
படக்குறிப்பு, சென்னை ஐ ஐ டி

சென்னை ஐ ஐ டியில் அம்பேத்கர் பெரியார் மாணவர் வலையம் எனும் அமைப்பின் செயல்பாடுகளை முடக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த செய்திகளை கேள்விப்பட்டு ஐ ஐ டி யிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்தியாவின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி எல் புனியா தெரிவித்துள்ளார்.

அந்த விளக்கம் கிடைத்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இன்று டில்லியில் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாகக் கூறி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அந்த மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தது என முன்னர் செய்திகள் வந்திருந்தன.

"கருத்துரிமை வேண்டும்"

கல்லூரி வளாகங்களில் மாணவர்களுக்கு கருத்துரிமை இருக்க வேண்டும் அது எவ்வகையிலும் நசுக்கப்படக் கூடாது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா வலியுறுத்தியுள்ளார்.

இப்படியானத் தடைகள் விதிக்கப்படுவது அவர்களுடையலக் குரலை ஒடுக்குவது போன்றது, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறுகிறார்.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயலபடுகிறது, அவர்கள் நலன்கள் பேணப்படுவதில்லை என்று கூறியுள்ள புனியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் இந்தத் தடைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பல்ல என்று அக்கட்சியின் தேசியச் செயலர் எச் ராஜா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொடுக்கப்பட்ட வசதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாலேயே சென்னை ஐ ஐ டி அந்த மாணவர் அமைப்பை தடை செய்துள்ளது என்று ராஜா கூறுகிறார்.