இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பாகிஸ்தான் பயணம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்களின் சந்திப்பு இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்ஷங்கரும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறைச் செயலர் அயிசாஸ் அகமத் சௌத்ரியும் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், BBC World Service
சார்க் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர், அந்தப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று பாகிஸ்தானிற்குச் சென்றுள்ளார்.
வெளியுறவுத் துறைச் செயலராகப் பதவியேற்ற பிறகு, முதல் கட்டமாக அண்டை நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெய்ஷங்கர், நான்கு நாடுகளுக்கு பயணம் செய்கிறார்.
கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று துவங்கிய இந்த பயணத்தில், முதலாவதாக பூட்டானிற்குச் சென்றார். 2 ஆம் தேதி பங்களாதேஷிற்கும் பிறகு பாகிஸ்தானிற்கும் அவர் சென்றுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இன்றைய கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்தான விவாதங்களும் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த சந்திப்பு குறித்த கருத்தை வெளிட்டிருந்த பாகிஸ்தான், ஜெய்ஷங்கர் தங்கள் நாட்டிற்கு வருகை தருவது புது நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
இதற்கு முன்பாக பாகிஸ்தான் - இந்தியா நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
இதையடுத்து, இந்தியா அந்நாட்டுடனான அமைதி பேச்சு வார்த்தைகளை நிறுத்தியது.
அப்போது இது குறித்து விளக்கம் அளித்த அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும் சேர்த்துக் கொள்ளாமல் அமைதி பேச்சு வார்த்தைகளை தொடர்ந்தால், பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என்றார். ஆனால் இந்தியா இந்தியா இதனை ஏற்கவில்லை.
இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்று பாகிஸ்தான் விமர்சனம் செய்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசாங்கம் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்தப் பேச்சு வார்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
































