தேர்தல் தோல்வி : த.நா காங்கிரஸில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்

ப சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள்
படக்குறிப்பு, ப சிதம்பரத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பலத்த தோல்வியைச் சந்தித்தது குறித்து கட்சியில் இரு கோஷ்டிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் ப. சிதம்பரம் பிரச்சாரம் செய்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்ட 39 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. அதன் வாக்கு சதவீதமும் 4.31 சதவீதமாக்க் குறைந்த்து.

வரும் ஜூன் ஏழாம் தேதியன்று இந்தத் தோல்வி குறித்தும் எதிர்காலத் திட்டம் குறித்தும் விவாதிப்பதற்காக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகனே காரணம் என்றும், அவர் பதவி விலக வேண்டுமென்றும் சில நிர்வாகிகள் நேற்று அறிக்கை விடுத்தனர்.

மற்ற கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முறையாக காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கூட்டம் போடவில்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த்து.

மாநில அளவில் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்தவில்லை, தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை, தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில்கூட பாரபட்சமாக நடந்துகொண்டது என்றெல்லாம் மாநிலத் தலைமை மீது அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த்து.

இந்த அறிக்கை குறித்து கேட்டபோது ஞானதேசிகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். இருந்தபோதும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், பொதுச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைக் குற்றம்சாட்டி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் காங்கிரசின் தோல்விக்கு பொருளாதார வீழ்ச்சியும் விலைவாசி உயர்வும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது என்றும் அப்போது நிதியமைச்சராக இருந்தது யார் என்றும் அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. ஆந்திராவில் அவசரப்பட்டு தெலங்கானா பிரிவினையை ஏற்படுத்தியபோது உள்துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம் என்றும் இதன் காரணமாகத்தான் அம்மாநிலத்தில் பலமாக இருந்து வந்த காங்கிரஸ் பலவீனமடைந்தது என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கோஷ்டிப் பூசல் வெளிப்படையாகத் தெரியாமல் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், நேற்று வெளியான அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.