ஈரோடு: கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலை ஒன்றில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்திருக்கும் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள கே.பி.ஆர் ஆலையில் செவ்வாயன்று காலையில் இந்த விபத்து நேரிட்டது.
இந்த ஆலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் தொட்டியில் இருந்த மின்சார மோட்டரில் பழுது ஏற்பட்டிருந்ததால், அதனை சரிசெய்ய இரண்டு தொழிலாளர்கள் அந்தத் தொட்டியினுள் இறங்கியபோது இந்த விபத்து நேரிட்டது.
அந்தத் தொட்டியில் அரை அடி உயரத்திற்கு கழிவு தேங்கியிருந்த நிலையில், அதிலிருந்து உருவான வாயுவால் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இவர்களைக் காப்பாற்ற மேலும் ஐந்து பேர், அந்தத் தொட்டியில் இறங்கியபோது, அவர்கள் வாயுவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேர் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இறந்துபோன 7 பேரில் 2 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஐந்துபேரில் 4 பேர் ஈரோடு மாவட்டத்தையும் ஒருவர் விருத்தாச்சலத்தையும் சேர்ந்தவர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஆலையின் உரிமையாளரைத் தேடிவருவதாகவும், இவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 304/2ன் படி வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இப்படி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தேசிய அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கீதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த்த் தொழிலாளர்களாகவே இருப்பதால், ஆபத்துக் காலங்களில் போதுமான சிகிச்சையோ, மரணம் ஏற்பட்டால் போதுமான இழப்பீடு கிடைப்பதில்லை என கீதா ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனரகம் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.































