ராஜீவ் கொலைக் கைதிகள்: விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 23 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
ராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து நேற்று செவ்வாய்க் கிழமை இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது.
தமிழக அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராஹுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
'இது இந்த தேசம் தொடர்புடைய விவகாரம். இது என் தந்தை தொடர்புடைய விவகாரம் அல்ல. ஒரு முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளிகளே விடுதலையானால் பொது மக்களின் நிலைமை என்ன ஆவது' என்று கூறியுள்ளார் ராஹுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
'இந்திய பாராளுமன்றத்தைத் தாக்கிய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்டபோது காங்கிரஸ் அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சித்த பாஜக, தற்போது மெளனம் காப்பதாக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் விமர்சித்தார்.
ராஜீவ் காந்தியை இழந்த வருத்தம் இன்னும் இருந்தாலும் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவது குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
'இது உச்ச நீதிமன்றத்தின் முடிவு. நான் மகிழ்ச்சியாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை. ஏனெனில் எங்களின் வருத்தம் இந்த சமீபத்திய சம்பவங்களினால் எழவில்லை. ராஜீவ் காந்தி கொடிய முறையில் கொல்லப்பட்டபோது எங்களின் வருத்தம் எழுந்தது. அது இன்று வரை இருந்து கொண்டே தான் இருக்கும்' என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
































