'1991 ஆம் ஆண்டு அளவுக்கு இந்தியாவுக்கு சிக்கல் இல்லை'

இந்தியப் பொருளாதாரம் கடும் அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில், பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கின்ற போதிலும் கடந்த 1991 இல் இருந்ததுபோல கடும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார். அந்தக் கால கட்டத்தில் இந்தியா தனது தங்கக் கையிருப்புக்களை அடகு வைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவது, ரூபாயின் மதிப்பு சரிவது, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் கவலைகள் அதிகரிக்கும் நிலையில் பிரதமர் நாடாளுமன்றத்தில் பொருளாதார நிலை குறித்து விரிவாக பேசினார்.
சிக்கனம் தேவை
ரூபாயின் மதிப்பு சரிவது கவலையளிக்கும் விடயம் என்று பிரதமர் ஒப்புக் கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 20 சதவீதம் குறைந்துள்ளது.
''இந்தியர்கள் தங்கத்தின் மீதான மோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும்'' என்று பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
தங்க இறக்குமதியைக் குறைக்க அரசு கூடுதல் கட்டுப்பாடுகளையும், வரிகளையும் விதித்துள்ளது.
எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படாவிட்டால், இந்த நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார். குறிப்பாக இந்த ஆண்டு நல்ல வேளாண் சாகுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதனால் நாட்டின் பணவீக்கம் குறையும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.



























