ஹைதராபாத் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் அரசைச் சாடினார் நரேந்திர மோடி

ஆந்திர பாஜக தலைவர்களுடன் நரேந்திர மோடி
படக்குறிப்பு, ஆந்திர பாஜக தலைவர்களுடன் நரேந்திர மோடி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பாகிஸ்தான் கொள்கையை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியச் சிப்பாய்கள் தாக்கிக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு வாக்கு வங்கிக்காக தேசத்தின் பாதுகாப்பை உதாசீனப்படுத்துகிறது என ஹைதராபாத்தில் பாஜக இளைஞர் அணிக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி குற்றம்சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் உரையாற்றிய முதல் பொதுக்கூட்டமாக, ஹைதராபாத்தில் நடந்த பாஜக இளைஞர் அணிக் கூட்டம் அமைந்திருந்தது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார் என்று வலுவான அறிகுறிகள் தென்படுகின்ற சூழ்நிலையில், இந்தப் பொதுக்கூட்டத்தில் ஐந்து ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய தேசத்துக்கு பாதுக்காப்பு அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வலமையில்லை என்றூம் ஆனால் இந்த அரசாங்கம் வாக்கு வங்கி அரசியலில் கழுத்து வரை மூழ்கியுள்ளது என்றும் மோடி சாடினார்.

ஆந்திராவில் தெலங்கானா மக்களுக்கும் சீமந்தரா மக்களுக்கும் இடையில் காங்கிரஸ் ஒரு பிளவை உருவாக்க முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும், தமிழகத்தில் அதிமுக தலைவர் ஜெயலலிதாவையும் நரேந்திர மோடி பாராட்டிப் பேசினார்.

குஜராத்தைப் போல தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசாங்கம்ய்ம் மக்களின் தொழில் திறன்களை வளர்ப்பதில் முதலீடு செய்கிறது என்று அவர் புகழ்ந்தார்.

இவர்கள் எல்லோரும் பாஜகவுடன் இணைந்து நாட்டிலிருந்து காங்கிரஸை விரட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் கலவரம் மூண்ட கிஷ்ட்வார் பகுதியை பார்க்க பாஜக தலைவர் அருண் ஜெட்லி சென்றபோது அவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் வர முடியாமல் தடுத்ததாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமார் அப்துல்லா மீது மோடி குற்றம்சாட்டினார்.

மோடியின் வருகையை முன்னிட்டு ஹைதராபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரம் பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.