காஷ்மீர் சம்பவம் தொடர்பில் ஏகே அந்தோணி மீண்டும் விளக்கம்

பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி
படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி
பிரசுரிக்கப்பட்டது

செவ்வாய்க் கிழமையன்று 5 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு பாகிஸ்தான் இராணுவமே காரணம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ஐந்து இந்தியப் படையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய இராணுவமும், பாதுகாப்பு அமைச்சரும் மாறுபட்ட தகவல்களை அளித்தது நாடாளுமன்றத்தை முடங்கச் செய்தது.

எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் படையினர் – ஐந்து இந்திய வீரர்களை கொன்றுவிட்டதாக இந்திய இராணுவம் கூறியிருந்தது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் இராணுவ உடையணிந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு, பாகிஸ்தானுக்கு நற்சான்றளிக்கும் முயற்சி என்றும் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கோரினார்.

இந்த சூழலில் இன்று இது குறித்து மீண்டும் விளக்கமளித்த ஏ கே அந்தோணி, பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் படையணி இத்தாக்குதலில் நேரடியாக பங்கெடுத்துள்ளதாக லோக்சபாவில் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல், நேரடிப் பங்களிப்பு இல்லாமல் அங்கே ஏதும் நடக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஏ கே அந்தோணி.

இந்த சம்பவம் குறித்து, தன்னிடம் இருந்த தகவல்களைத்தான் முன்பு நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டதாகவும், ஜம்மு காஷ்மீர் சென்ற இராணுவத் தளபதி பிக்ரம் சிங் தனக்கு கூடுதல் தகவல்கள் கொடுத்துள்ளதாகவும் ஏ கே அந்தோணி கூறியுள்ளார்.

அதேநேரம் இந்த தாக்குதலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.