புதிய மாநிலங்கள் கோரி இந்தியாவில் வன்முறை

ஆந்திராவைப் பிரித்து தெலங்கான மாநிலம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக தனி மாநிலக் கோரிக்கைகள் நிலவிவரும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை மிக்க ஆர்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் வட கிழக்கேயுள்ள அஸ்ஸாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தைப் பிரித்து கோர்க்காலாந்து உருவாக்கப்பட வேண்டும் என்றும் தற்போது ஆர்பாட்டங்கள் நடக்கின்றன.
அஸ்ஸாமில் பல்வேறு அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்த ஆர்பாட்டங்களின்போது, ரயில் மற்றும் சாலைகள் மறிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன. அஸ்ஸாம் மாநிலத்தை மீண்டும் பிரிக்க அனுமதிக்க முடியாது என்று மாநில முதல்வர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.
தெலங்கான உருவாக்குவது குறித்து அறிவிக்கப்பட்டால், இதுபோல வன்முறைகள் நடக்கும் என்று தான் மத்திய அரசை முன்பே எச்சரித்திருந்ததாகவும் அஸ்ஸாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பாதிப்பு

இதேபோல மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப் பகுதிகளைப் பிரித்து கோர்க்காரலாந்து மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோருபவர்கள் சனிக்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அங்கே தீயிடப்பட்டுள்ளது. வன்முறைகள் ஆங்காங்கே நடந்துள்ளன. பதற்றம் காரணமாக, கோடைக்கு டார்ஜிலிங் வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு இனி புதிய மாநிலங்களை உருவாக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோர்க்காலாந்து கோரிக்கையை நிராகரிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.
தெலங்கான மாநிலத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆந்திராவின் பிற பகுதியில் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதேநேரம் தெலங்கான மக்கள் புதிய நம்பிக்கையோடு இருப்பதாக தற்போது ஐதிராபாத்தில் இருக்கும் தனியார் தமிழ் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் சலீம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
































