மும்பை கட்டிடம் இடிந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கைது

இந்தியாவின் மும்பை நகரில் கட்டப்பட்டுவந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்து எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒன்பது பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
கட்டுமான பணிசெய்துவந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வட்டார நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றமாக அமையக்கூடிய ஆட்கொலை, கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முறைப்படி சுமத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சட்ட விதிகளை மீறும் வகையில் கட்டப்பட்டுவந்த இந்த அடுக்குமாடிக் கட்டிடம் கடந்த வியாழனன்று இடிந்ததில் உயிரிழந்தவர்களில் இருபத்து ஆறு பேர் குழந்தைகள் ஆவர்.
கொல்லப்பட்டதில் பெரும்பான்மையானவர்கள் கட்டிடத் தொழிலாளிகளூம் அவர்தம் குடும்பத்தாருமே.


























