இலங்கை விமானப்படைக்கு பயிற்சி-- ஜெயா,கருணாநிதி எதிர்ப்பு

ஜெயலலிதா
படக்குறிப்பு, இலங்கை படைகளுக்கு பயிற்சி-- ஜெயா எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கும் ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்கள் அவர்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டுமென கோரியிருக்கின்றனர்.

இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ்த் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை வீரர்கள் ஒன்பது மாத கால பயிற்சிக்காக தாம்பரம் விமானப்படை நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் எனக்கூறி, அவ்வீரர்கள் வருகைக்குத் தன் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக ஜெயலலிதா , சென்னையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்தஇடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மௌனம் காக்கும் மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உலகளவில் .வற்புறுத்தப்படும்போது இலங்கை விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்றும் கூறுகிறார் ஜெயலலிதா.

எனவே பயிற்சி பெற வந்திருக்கும் வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் தமிழக முதல்வர் அவ்வறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதியும் கண்டனம்

திமுக தலைவர் கருணாநிதி
படக்குறிப்பு, செய்திகள் உண்மையானால் கண்டிக்கிறேன்-கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியும், செய்தியாளர்களிடம் பேசுகையில், அவ்வாறு பயிற்சியளிக்கப்படுவது உண்மையானால் கண்டிக்கத்தக்கது, அவ்வீரர்கள் உடனடியாகத் திருப்பியனுப்பப்படவேண்டுமெனக் கோரியிருக்கிறார். மற்ற பல கட்சித் தலைவர்களும் அவ்வாறே வற்புறுத்தியிருக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தாம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜூன் 21 அன்று ரியோடிஜெனிரோவில் சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றம் குறித்து விவாதித்ததாக திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் கூறியிருக்கிறார்.

எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த கருணாநிதியின் கடிதத்திற்கான பதிலில், மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதியை சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ அரசியல் தீர்வு வேண்டுமென்று தான் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.