'பவானியாற்றில் அணை கட்டுமிடத்தை பார்க்கச் சென்ற அதிகாரிகள் தடுக்கப்பட்டனர்'

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பாயும் சிறுவாணி ஆற்றின் மூல நதியான பவானியின் குறுக்கே கேரள அரசினால் புதிய அணை ஒன்று கட்டப்படுவதாகக் கூறப்படும் இடத்தை பரிசோதிக்கச் சென்ற தமிழக பொறியாளர்களை கேரள கிராமவாசிகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று தாம் அங்கு சென்றதாகவும், ஆனாலும் தம்மை அப்பகுதி கிராம மக்கள் சிற்றூர் என்ற இடத்துக்கு அருகே தடுத்து திருப்பி அனுப்பியதாகவும், தமிழக பொறியாளர் குழுவில் சென்ற ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

'தமிழகத்துக்கான நீர் வரத்து குறையும்'

அந்த அணை கட்டப்படுமிடத்து, அதனால் சிறுவாணி மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய நீரின் வரத்து குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறிய அவர், ஆயினும் இது குறித்த தமிழக அரசின் கருத்து என்னவென்று தமக்கு தெரியாது என்றும் கூறினார்.

அந்த அணை கட்டப்படுவதால், தமது பகுதிக்கு நன்மை கிடைக்கும் என்று காத்திருக்கும் அப்பகுதிவாசிகள், தமிழக அதிகாரிகள் அந்த அணை கட்டும் பணிகளை தடுத்து விடுவார்கள் என்று அஞ்சியே தம்மை தடுத்து, திருப்பி அனுப்பியதாகவும் அவர் கூறினார்.