தமிழக பொலிசை அனுப்பி முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க நேரிடலாம்: ஜெ.

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிக்காக இடப்பட்ட துளைகளை தமிழக அதிகாரிகள் சென்று அடைப்பதை கேரள அரசு தடுத்துவிட்ட நிலையில், அணைப் பகுதியில் தமிழகத்திற்கு குத்தகை விடப்பட்ட இடத்தை தமிழக அரசு தமது பொலிசாரையே அனுப்பி பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாமெனக் கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள அரசு தனது இப்படியான அடாவடித்தனத்தை தொடருகிற பட்சத்திலும், தொழில்துறைக்கான மத்திய பாதுகாப்பு படையை இந்த இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாத பட்சத்திலும், தமிழக பொலிசாரை அனுப்பி அணைக்கு பாதுகாப்பு வழங்குவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுக்காக செய்யப்பட்ட துளைகளை அடைப்பதற்குத் தேவையான பணிகள் நிறைவேற்றப்படுவதை கேரள அரசு அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பில் நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட அதிகாரக் குழுவானது, அணையில் செய்யப்பட்ட துளைகள் அடைக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருந்தாலும், தமிழக அதிகாரிகள் துளையை அடைக்கச் சென்றபோது கேரள அதிகாரிகள் அவர்களைத் தடுத்திருந்தனர் என்றும், இது தொடர்பில் தமிழக அரசின் முறைப்பாடுகளுக்கு கேரள அரசு பதில் அளிக்கவில்லை என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்மேற்குப் பருவ மழைக்கு முன்னால் இத்துளைகளை அடைத்தால்தான் அணைக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
துளைகள் அடைக்கப்படாமல் போவதால் அணை வலுவிழந்து போகவேண்டும் என கேரளா விரும்புகிறது என ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
அணைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான் அங்கு தமது பொலிசாரை நிறுத்தியுள்ளதாக கேரள அரசு கூறிக்கொண்டாலும், தமிழக பொறியியலாளர்கள் அணையில் மராமத்து பணிகளை செய்வதைத் தடுப்பதே அதன் உண்மையான நோக்கம் என்றும் தமிழக முதல்வர் சாடியுள்ளார்.




























