காற்றாலை மின்சாரமும் தமிழக மின்வாரியமும்:முற்றும் மோதல்கள்

தமிழகத்தில் போதுமான அளவுக்கு மின் விநியோக கட்டமைப்பு இல்லை?
படக்குறிப்பு, தமிழகத்தில் போதுமான அளவுக்கு மின் விநியோக கட்டமைப்பு இல்லை?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும் சூழலில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றாலைகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு போதுமான அளவுக்கு கட்டுமான வசதிகள் இல்லாத காரணத்தால், வாரத்துக்கு இரண்டு நாள் மின் உற்பத்தியை குறைத்துக் கொள்ளும்படி காற்றலை மின் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழ் நாடு கடும் மின் நெருக்கடியில் இருக்கும் போது இப்படியான முடிவுகளை எடுப்பது சரியானது அல்ல என்று மின்வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காற்றாலை மூலம் வருடத்துக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகும் சூழலில் அதில் பெரும் முதலீடுகளை செய்ய வேண்டுமா என்கிற கருத்து தமிழ்நாடு மின் வாரியத்தில் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நிதி நிறுவனங்கள் மின் வாரியத்தில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவதும் தமிழக மின் வாரியத்தால் பல பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு ஒரு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.

வளர்ந்து வரும் ஒரு மாநிலத்தில் காற்றாலையின் மூலம் மின்சாரம் வளர்ச்சிப் திட்டங்களை நிறுத்தவும் முடியாது எனவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

தேசிய அளவில் மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்து, மின் விநியோகத்துக்கென சிறப்பான ஒரு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே பல மாநிலங்கள் எதிர்கொள்ளும் மின் நெருக்கடியை சமாளிக்க முடியும் எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.