ஊடக கண்காணிப்பு அமைப்பு தேவையா இல்லையா

இந்திய தொலைக்காட்சி ஊடக அறை
படக்குறிப்பு, இந்திய தொலைக்காட்சி ஊடக செயற்பாடு விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களை முறைப்படுத்த பிரஸ் கவுன்சில் அமைப்பு இருக்கும் நிலையில், காட்சி ஊடகங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

காட்சி ஊடகங்கள் தங்களைத் தாங்களே நெறிப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டதால், அந்த ஊடகங்களும் ஓர் அமைப்பின் நெறிப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வலியுறுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி சேனல்கள், பிரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் வர விரும்பாவிட்டால், தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு அமைப்பின் நெறிப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் கட்ஜு. தேசிய ஊடக தினம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது கட்ஜு இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

ஊடகங்கள், தங்களைத் தாங்களே முறைப்படுத்திக் கொள்வதாகக் கூறினால், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் அதே கொள்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

"தங்களைத் தாங்களே முறைப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறுவது, ஒன்றும் செய்வதில்லை என்று பொருள். நீங்கள் மட்டும்தான் ஞானிகள் மற்றவர்கள் எல்லாம் பாவிகளா? அப்படியானால், பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் செய்திகளுக்கு என்ன அர்த்தம்? நீரா ராடியே ஒலி நாடாக்கள் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு என்ன அர்த்தம்?" என்று ஊடகங்களிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் கட்ஜு.

அதே நேரத்தில், ஊடங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை எப்போதும் தான் ஆதரிக்கவில்லை என்று கட்ஜு குறிப்பிட்டார். ஊடகவியாளர்கள், தவறு செய்யும் பட்சத்தில், அவர்களிடம் விவாதித்து, தவறை உணர வைக்க முடியும் என்றார் நீதிபதி கட்ஜு.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும், காட்சி ஊடகங்களை முறைப்படுத்த ஓர் அமைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்.

தேசிய ஊடக தின நிகழ்வு
படக்குறிப்பு, தேசிய ஊடக தின நிகழ்வு

"ஊடக சுதந்திரம் பாதிக்கப்படும்"

ஊடகங்களை நெறிப்படுத்த, கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஊடக கவுன்சில் என்ற ஒரு அமைப்பு தேவையில்லை, அந்த மாதிரி ஊடகக் கட்டுப்பாடுகள் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாகத் தான் முடியும் என்று ஊடகவியலாளரும், சென்னையில் இருந்து இயங்கிவரும், ஆசிய ஊடகக் கல்லூரியின் நிறுவனருமான சசிக்குமார் அவர்கள் கூறினார்.

தமிழோசைக்கு கருத்து தெரிவித்த சசிக்குமார், இந்திய அரசு, அவசர நிலைக்காலத்திலும், பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போதும், பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்க எடுத்த முயற்சிகளை நினைவு கூர்ந்து, அந்த முயற்சிகள் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா , பிரிட்டன் போன்ற நாடுகளைப் போல ஊடகங்களை நெறிப்படுத்த சட்டங்கள் வேண்டும் என்ற வாதங்கள் தவறானவை என்று கூறிய சசிக்குமார், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள நிலைமைகள் வேறானவை. அங்கெல்லாம் , ஊடக சுதந்திரம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகப் போற்றப்படுகிறது. அமெரிக்காவின் அரசியல் சட்டத்தில் முதலாவது சட்டத்திருத்தத்திலேயே, ஊடக சுதந்திரம் என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஊடக சுதந்திரம் என்பதற்கு , அரசியல் சட்டத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு ஏதுமில்லை, அது கருத்து சுதந்திரம் என்ற உரிமையிலிருந்து அர்த்தப்படுத்தப்படும் ஒரு சுதந்திரமாகத்தான் இருக்கிறது என்றார்.

இந்த நிலையில் இதற்கு மேலும், இது போன்ற ஒரு நெறிமுறைப்படுத்தும் அமைப்பைக்கொண்டுவருவது என்பது, தணிக்கையைக் கொண்டுவருவதற்கு சமமானது என்றார் சசிக்குமார்.

ஆனால் இந்தியாவில் தொலைக்காட்சிகள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதில்லை, பரபரப்புக்காக செய்திகளை வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டுகளில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்ட சசிக்குமார், மக்களை அவமானப்படுத்துவது, நியாயமற்ற வகையில் செய்திகளை வெளியிடுவது போன்ற தவறுகள் தொலைக்காட்சிகளில் நடக்கின்றன என்று கூறினார். ஆனாலும், இதற்கு பதில் ஒரு வெளியிலிருந்து வரும் கட்டுப்பாடு அமைப்பு அல்ல என்றார் அவர்.

அச்சு ஊடகங்கள் பிரஸ் கவுன்சிலின் கீழ் வருகிறது
படக்குறிப்பு, அச்சு ஊடகங்கள் பிரஸ் கவுன்சிலின் கீழ் வருகிறது

"கண்காணிப்பும் கட்டுப்பாடும் அவசியம்"

கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவை முக்கியமானவை என்றாலும், அவைகளைப் பேண வேண்டுமென்றால், ஊடகங்களுக்கு சுயகட்டுப்பாடு தேவை, அது போன்ற ஒரு சுயகட்டுப்பாடு ஊடகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் , காலச்சுவடு என்ற சிறுபத்திரிகையின் ஆசிரியருமான கண்ணன் அவர்கள் தெரிவித்தார்.

தமிழோசைக்கு கருத்து தெரிவித்த கண்ணன், இந்த மாதிரியான சுயகட்டுப்பாட்டை ஊடகங்களால் மேற்கொள்ளமுடியாத போது, வெளியிலிருந்து கட்டுப்படுத்துவது அவசியமாகின்றது என்றார். இப்போது இருக்கும் இந்திய பிரஸ் கவுன்சிலால், இது போன்ற கட்டுப்பாட்டை செயல்படுத்த முடியவில்லை. அச்சு ஊடகங்களையே அந்த அமைப்பால் சரியாக நெறிமுறைப்படுத்த முடியவில்லை. எனவே அந்த அமைப்பினை விரிவுபடுத்தி, காட்சி ஊடகங்களை அதன் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு அதிக அதிகாரங்களைத் தருவதற்கும் அவசியம் இருக்கிறது என்றார் கண்ணன்.

ஆனால் கருத்துரிமைக்கு முக்கியத்துவம் தரப்படும் ஒரு ஜனநாயக அமைப்பில், இது போன்ற ஊடகக் கட்டுப்பாடு சட்டங்கள் தணிக்கை முறைக்கு இட்டுச்சென்று, கருத்துரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற அச்சங்களும் நியாயமானவையே என்று ஒப்புக்கொண்ட கண்ணன், அது குறித்து மீண்டும் மீண்டும் மறு பரீசலனை செய்து கொண்டே இருக்கவேண்டும் என்றார். ஆனால், அதற்காக கட்டுப்பாடே தேவையில்லை என்ற கண்ணோட்டத்திலும் அதை அணுகமுடியாது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், சர்ச்சைக்குள்ளானவர்கள் என்று பலரும், பரபரப்புக்காகச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் கண்ணன்.