இலவச ஆடு வழங்கும் தமிழக அரசின் திட்டம்

ஜெயலலிதா
படக்குறிப்பு, ஏழு லட்சம் பேருக்கு இலவச ஆடுகள்- ஜெயலலிதா அரசின் திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ஒரு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, தலா 4 ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

ஐந்தாண்டுகளில் ஏழு லட்சம் பேருக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.925 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

மற்ற பல அஇஅதிமுகவின் இலவசத் திட்டங்களைப் போல் இதுவும் திமுக நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் துவங்கப்படும்.

செம்மறி ஆடு அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர்.

அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.

நிபந்தனைகள்

இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஆடுகளைப் பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். பசு அல்லது ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.

இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

மேலும் இலவசப் பசுக்கள் வழங்கும் திட்டத்துக்காக ஐந்தாண்டுகளுக்கு ரூ.232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 60 ஆயிரம் பசுக்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. நடப்பாண்டில் ரூ.56 கோடி செலவில் 12 ஆயிரம் பசுக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே வழிமுறைகள் இலவச பசுக்கள் அளிக்கும் திட்டத்துக்கும் பின்பற்றப்படும். கலப்பின ஜெர்சி பசுக்கள், 5 வயதுக்கு குறைவான வயதுடைய மாடுகள் கொள்முதல் செய்யப்படும்.

இலவச திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பசுக்களை 4 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஓய்வூதியம்

தவிரவும் நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்கள் இலங்கைத் தமிழக அகதிகளுக்கும் உண்டு என்று அண்மையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டபடி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.