காவிரி: விவசாயிகள் பானை உடைப்பு போராட்டம்

காவிரி விவகாரம்: விவசாயிகள் பானை உடைப்பு போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

திருச்சி அண்ணா சிலை அருகே தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்குமுறை ஆணையமும் அமைக்க வலியுறுத்தியும், இதை அமைக்க மத்திய அரசு காலம் கடத்துவதாகக் கண்டனம் தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மழைக்காலத்திற்கு முன்பே ஏரிகள், தடுப்பணைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாது மேல்முறையீடு செய்திருப்பதை வாபஸ் பெற வேண்டும், மே 15-ஆம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு காவிரி வழக்கை வரும் 14 தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

காவிரி விவகாரம்: விவசாயிகள் பானை உடைப்பு போராட்டம்

இதனை அறிந்த விவசாயிகள் இந்த தீர்ப்பானது மத்திய அரசுக்கு ஆதரவானது என்று கூறி உண்ணாவிரத பந்தலில் இருந்து எழுந்து திடீரென தலையில் பானையை கவிழ்த்துக் கொண்டு காவிரி பாலம் நோக்கி பேரணியாக நடைபயணம் மேற்கொண்டனர்.

பின்னர் காவிரியின் நடுவே இறங்கி தாங்கள் சுமந்து வந்த பானைகளை காவிரி ஆற்றில் உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடைத்த அந்த பானைகளில் உச்சநீதிமன்றமே யானை பெரிதா? பானை பெரிதா? என்ற வாசகம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :