நாட்டை விட்டு வெளியேறிய ராஜாங்க அதிகாரி மீது வடகொரியா குற்றச்சாட்டு
சமீபத்தில், நாட்டை விட்டு வெளியேறி தென் கொரியாவில் குடியேறிய வட கொரிய ராஜாங்க அதிகாரி ஒருவரை பல விதமான குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பட மூலாதாரம், AP
அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது குறித்து வட கொரியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக கருத்துத் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் மத்திய செய்தி முகமை அந்த அதிகாரியை ''மனித அழுக்கு'' என்று விமர்சித்துள்ளது.
மேலும், தப்பியோடியவர், மோசடி மற்றும் அரச ரகசியங்களை விற்பனை செய்ததற்கான விசாரனையின் கீழ் அவர் உள்ளார் என்று தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தே யோங் ஹோ என்ற வடகொரியாவின், லண்டனுக்கான முன்னாள் துணைத் தூதர் தென் கொரியாவிற்கு தனது குடும்பத்தோடு வந்துள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அவர் நாட்டை விட்டு வெளியேறிய வட கொரியாவின் உயர் பதவி வகிக்கும் அதிகாரி என்று நம்பப்படுகிறது.




























