முன்னாள் அதிபர் மார்கோஸின் உடலை நாயகர்கள் கல்லறையில் அடக்குவதற்கு வலுக்கும் எதிர்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

மக்களின் வெறுப்புக்கு ஆளான முன்னாள் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸின் உடலை மணிலாவிலுள்ள நாயகர்களின் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் திட்டத்திற்கு எதிராக ஆயிரத்திற்கு மேலானோர் பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கனமழையை பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்திய அவர்கள், தற்போதைய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ, இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் அதிபர் மார்கோஸ் பிலிப்பைன்ஸ் தேசிய நாயகர்களின் மனந்திருந்தாத எதிரி என்று போராட்டகாரர்களில் ஒருவரான செனட் அவை உறுப்பினர் ரிசா ஹான்டிவெரோஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் அதிபர் மார்கோஸ் பல ஊழல்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்.

1986 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விரட்டப்பட்ட அவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இறந்தார்.