அஸாஞ் தொடர்பான ஐநாவின் தீர்ப்பு 'நகைப்பிற்கிடமானது': பிரிட்டன்

அஸாஞ் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஐநாவின் தீர்ப்பாயம் கூறியுள்ளது
படக்குறிப்பு, அஸாஞ் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஐநாவின் தீர்ப்பாயம் கூறியுள்ளது
பிரசுரிக்கப்பட்டது

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸாஞ், பிரிட்டனாலும் சுவீடனாலும் ''எதேச்சாதிகாரமான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக'' ஐநாவின் மனித உரிமை விசாரணைக் குழு ஒன்று அளித்துள்ள தீர்ப்பை 'நகைப்பிற்கிடமானது' என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஃபிலிப் ஹாம்மண்ட் வர்ணித்துள்ளார்.

அஸாஞ் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஐநாவின் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

ஆனால், ஜூலியன் அஸாஞ் நீதியை சந்திக்காமல் ஒளிந்திருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறுகின்றார்.

ஜூலியன் அஸாஞ் 2012-ம் ஆண்டில் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

தான் கைதுசெய்யப்பட்டு, தன்மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சுவீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

தன்மீதான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை அவர் மறுக்கின்றார்.

ஐநாவின் தீர்ப்பு ' எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது' என்று கூறியுள்ள பிரிட்டனின் வெளியுறவுச் செயலகம், அஸாஞ் தூதரகத்தை விட்டு வெளியில் வந்தால் கைதுசெய்யப்படுவார் என்று கூறியுள்ளது.