வெனிசூவேலாவில்: முக்கிய எதிரணி பிரமுகருக்கு 13- ஆண்டு சிறை

பட மூலாதாரம், Reuters
வெனிசூவேலாவில் முன்னணி அரசாங்க எதிர்ப்பாளர் ஒருவருக்கு 13- ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டமொன்றின் மேயரான லியோபோல்டோ லோபெஸ், கடந்த ஆண்டு உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களை ஆதரித்திருந்தார்.
பல வாரங்களாக நடந்திருந்த இந்த போராட்டங்களில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருந்தனர்.
அந்த வன்முறைகளைத் தூண்டியதாக லோபெஸ் மீது நீதிமன்றம் ஒன்று குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த வழக்கு விசாரணை மோசமான முறைகேடுகளுடன் நடந்துள்ளதாக அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு தொடர்பில் அமெரிக்க வெளியுறவு அமைச்சு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வெனிசூவேலா அரசாங்கம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்குத் தொடுநர் தரப்பில் நூற்றுக்கும் அதிகமான சாட்சிகளை நீதிபதி விசாரித்திருந்த போதிலும், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் இரண்டு சாட்சிகளை மட்டுமே விசாரித்திருந்ததாக கூறப்படுகின்றது.
டிசம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எதிரணியை இந்தத் தீர்ப்பு பலவீனப்படுத்திவிடும் என்றும் விமர்சனங்கள் உள்ளன.
































