புதிய கடன் திட்டத்திற்கு கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
புதிய கடன் திட்டத்திற்கு கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 85 பில்லியன் யூரோக்களை கிரேக்க நாட்டிற்கு கடனாக அளிப்பது தொடர்பான கூட்டத்தை யூரோ வலய நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டியிருக்கும் நிலையில், இந்த ஒப்புதல் வந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
புதிய கடன் திட்டம் தொடர்பாக கிரேக்க நாடாளுமன்றத்தில் இரவு முழுக்க விவாதம் நடந்தது. இந்தப் புதிய கடன் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை அலெக்ஸிஸ் சிப்ராஸ் கேட்டுக்கொண்டார்.
இந்தப் புதிய திட்டத்திற்கு மாற்றாக, குறுகிய காலக் கடன் எதையாவது கிரேக்கம் பெறுமானால், இந்தப் பிரச்சனை முடிவின்றி நீண்டுகொண்டே செல்லும் என அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
ஆளும் ஸ்ரிஸா கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கும் நிலையில், அடுத்த வாரம் சிப்ராஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



























