ஐ.எஸ். ஆயுததாரிகள் விஷவாயு தாக்குதல் நடத்துவதாக தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் குர்த் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது, ஏதோ ஒரு வடிவத்தில் விஷவாயுவைப் பயன்படுத்தியுள்ளனர் என சிரியாவின் வட பகுதியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ஹசாக்கே என்ற ஊரைச் சுற்றிலும் நடந்த தாக்குதல்களில் இது நடந்துள்ளதாக குர்த் இனத்தாரும் மற்றும் சிரியாவின் யுத்தத்தை பிரிட்டனில் இருந்தபடி கண்காணிக்கும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் நேர்த்தியின்றி சாதாரணமாக தயாரிக்கபட்டிருந்ததோடு, துர்நாற்றம் வீசக்கூடிய மஞ்சள் வாயுவை அவை வெளியிட்டன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அருகிலிருந்தவர்களுக்கு குமட்டலும், கண்ணிலும் தொண்டையிலும் எரிச்சலும் ஏற்பட்டது. ஆனால் எவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை.

இது எவ்வகை வாயு என்பது இன்னமும் தெரியவில்லை என குர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இஸ்லாமிய அரசு அமைப்பினர் குளோரினை ஆயுதமாக பயன்படுத்தினர் என கடந்த காலங்களில் குர்த் இனத்தார் குற்றஞ்சாட்டியதுண்டு.