நெம்த்சோஃப் உடலுக்கு மக்கள் அஞ்சலி

பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அரசாங்க தலைமையகமான கிரெம்ளின் அருகே ஒரு பாலத்தின் அடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான போரிஸ் நெம்த்சோஃப்பின் பூத உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஸகரோஃப் மையத்தில் இறுதி சடங்குகள் நடந்த பின்னர் மாஸ்கோவின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் நெம்த்சோஃப் புதைக்கப்படவுள்ளார்.

இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ரஷ்யாவுக்குள் செல்ல தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் பலர் கூறுகின்றனர்.

சிறையில் இருந்துவரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர் அலெக்ஸெய் நவல்னி இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முன்வைத்த கோரிக்கையும் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

நெம்சோஃப் சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் உடனிருந்த அவருடைய காதலி, ரஷ்யாவில் இருந்து வெளியேறி, யுக்ரெய்னிலுள்ள தனது குடும்பத்தை சென்றுசேர அனுமதிக்கப்பட்டுள்ளார்.