பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு, பெல்ஜியத்தில் உஷார் நிலை

பெல்ஜியம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
படக்குறிப்பு, பெல்ஜியம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது

கிழக்கு பெல்ஜியத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஜிகாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அந்நாடு முழுவதும் உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று மாலையில், இந்த இருவரும் காவல்துறையினரைப் பார்த்து தானியங்கித் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, காவல்துறையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வெவ்யே நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மூன்றாவதாக ஒரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த சில மணி நேரங்களில் தாக்குல் நடத்தத் தயாராக இருந்த, சிரியாவிலிருந்து திரும்பிவந்த ஒரு குழுவினர்தான் நடவடிக்கைக்கு உள்ளானார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரஸ்ஸல்ஸ் பகுதியில் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நபர்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினர் மீது பல நிமிடங்களுக்கு துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

இந்த நடவடிக்கைக்குப் பிறகு, சில கலாஷ்நிகோவ் ரக துப்பாக்கிகள், குண்டு செய்யும் கருவிகள், காவல்துறையினருக்கான உடைகள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெவ்யே நகரில் பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமையன்று பிரஸ்ஸல்ஸ், அதனைச் சுற்றியுள்ள ஆண்டர்லெக், ஷாவர்பீக் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாதத் தடுப்பு சோதனைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமையன்று காலையில், இஸ்லாமியத் தீவிரவாதிகளென சந்தேகிக்கப்படும் இருவர் பிரஸ்ஸல்ஸின் புறநகரப் பகுதியான ஸாவென்டம் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியாவிலும், ஈராக்கிலும் இஸ்லாமியக் குழுக்களுடன் இணைந்து போரிடுவதற்காக 300க்கும் மேற்பட்டவர்கள் பெல்ஜியத்திலிருந்து சென்றிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் வெய்வ நகரம் 56 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது.

பிரான்சில் கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதத்தில், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு யூத அருங்காட்சியகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.