கிரேக்கத்தில் புதிய அதிபரைத் தேர்தெடுக்கும் முயற்சி மீண்டும் தோல்வி
கிரேக்கத்தில் புதிய அதிபரைத் தேர்தெடுக்கும் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பட மூலாதாரம், AP
இறுதியாக முடிவெடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒருவரை அதிபராகத் தேர்தெடுக்க முடியாமல் போனதை அடுத்து, நாட்டில் புதிய இடைத் தேர்தல் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் என பிரதமர் அண்டனிஸ் சமராஸ் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடந்து முடிவு தெரியும் வரை, கிரேக்கத்தை கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மீட்க சர்வதேசச் சமூகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பாதிக்கபடக்கூடும்.
அந்த உதவிகள் இருந்தால் மட்டுமே, கிரேக்கம் தனது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும், உள்நாட்டிலும் ஊதியம் வழங்குவது உட்பட பல நடவடிக்கையை எடுக்க முடியும்.
நாட்டின் அதிபராகத் தேர்தெடுக்கப்பட ஒரு வேட்பாளர் நாடாளுமன்றத்தில் 180 வாக்குகளைப் பெற வேண்டும். எனினும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ஸ்ட்ராவோஸ் டிமாஸால் அந்த அளவுக்கு வாக்குகளைப் பெற முடியவில்லை.
அவர் ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
கிரேக்கச் சட்டத்தின்படி இப்போது பொதுத் தேர்தல்கள் அழைக்கப்பட வேண்டும். அது பல வாரங்களுக்கு அடுத்து என்ன எனும் கேள்வியை எழுப்பி, பலவீனமான அதன் பொருளாரத்தின் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதேவேளை கிரேக்கத்தில் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் முன்னணியில் இருக்கும் தீவிர இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட சைரிசா கட்சி, கிரேக்கத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செலவினக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிவருகின்றனர்.
கடன்களை மீண்டும் செலுத்த பன்னாட்டு அமைப்புகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என அக்கட்சி கோருகிறது.
































