அறுபது புதிய போயிங் விமானங்களை வாங்குகிறது ஏர் சைனா
சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா புதிதாக 60 போயிங் 737 ரக விமானங்களை வாங்குகிறது.

அதன் அடிப்படை விலை 6 பில்லியன் டாலர்களுக்கும் கூடுதலானது. இந்த விமானங்கள் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தயாரித்து அந்த விமான நிறுவனத்துக்கு வழங்கப்படும். இத்தகவலை ஏர் சைனா விமான ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது.
தற்போது ஏர் சைனா வாங்கத் திட்டமிட்டுள்ள விமானங்கள் 737 ரக விமானங்களின் அடுத்த தலைமுறையான 737 மேக்ஸ் வகையைச் சேர்ந்தவை. இவை குறைந்த அளவுக்கு எரிபொருளை உபயோகிக்கும் திறன் கொண்டவை என்று அறியப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் உலகின் மிகபெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஏன் சீனாவுக்கு 747-8 வகையில் அது வாங்கவுள்ள ஏழு விமானங்களில் முதலாவதை அளித்தது.
தமது விமான சேவையில் 737 ரக விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்கு வகித்து, தமது வெற்றிக்கு தொடர்ந்து உதவும் என தாம் நம்புவதாக, போயிங் நிறுவனத்தின் வடகிழக்கு ஆசியப் பகுதிக்கான துணைத் தலைவர் இஷான் மௌனிர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
போட்டி
இதனிடையே போயிங் நிறுவனத்தின் வர்த்தக போட்டியாளரான ஏர்பஸ் சீனாவில் தனது இரண்டாவது தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவம் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
இதன் மூலம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தையில் தனது ஏ 330 ரக ஜெட்லைனர் விமானங்களின் விற்பனையை கூட்டமுடியும் என்று ஏர்பஸ் நம்புகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு அடுத்த இருபது ஆண்டுகளில் கூடுதலாக 6000 விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது. சீனாவுக்கு உல்லாசப் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இதற்கு காரணமாக போயிங் கூறுகிறது.
































