அரசுகளால் நடத்தப்படும் ஒட்டுமொத்த கண்காணிப்பு: ஐநா கவலை

அரசுகள் நடத்தும் கண்காணிப்பு தனி மனித சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்கிறது ஐநா அறிக்கை
படக்குறிப்பு, அரசுகள் நடத்தும் கண்காணிப்பு தனி மனித சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்கிறது ஐநா அறிக்கை
பிரசுரிக்கப்பட்டது

அரசுகள் தங்கள் பிரஜைகள் மீது நடத்தும் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறைகள் , தனி நபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும், ஆபத்தான ஒரு போக்காக மாறிவருவதாக ஐ.நா மன்றம் எச்சரிக்கிறது.

ஒட்டுமொத்த கண்காணிப்புகள் மற்றும் தரவுகள் கட்டாயமாக சேமித்து வைக்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் ஆகியவைகளை " தேவையற்றவை, அளவுக்கு மீறியவை " என்று வர்ணிக்கும் ஐ.நா மன்ற அறிக்கை ஒன்று, இத்தகைய நடவடிக்கைகள் சுயாதீனமாக கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறியது.

பிரிட்டனில், உளவுத்துறைகளுக்கு, மக்களின் தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடு குறித்த ஆவணங்களைப் பார்வையிட அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய அவசர சட்டம் ஒன்றை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு நாளுக்குள் இந்த அறிக்கை பிரசுரமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு பெரும் தர்மசங்கடத்தைத் தரும் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்த நாடுகள் ஒட்டுமொத்த கண்காணிப்பு மற்றும் தரவுகளை சேமித்து வைத்தல் ஆகிய வழிமுறைகளை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றன.

இந்த மாதிரிக் கண்காணிப்புகள் அடிப்படை மனித உரிமைகளையும் , கருத்துச் சுதந்திரத்தையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்குவதாக ஐநா கூறுகிறது.