படகுப் பயணங்களை ஏற்பாடு செய்த 5 பேர் கைது

படகுகள் மூலம் ஆஸ்திரேலிாய செல்வோர் பலர் பாதிவழியில் இறக்கின்றனர்
படக்குறிப்பு, படகுகள் மூலம் ஆஸ்திரேலிாய செல்வோர் பலர் பாதிவழியில் இறக்கின்றனர்
பிரசுரிக்கப்பட்டது

ஒரு ஆண்டு நீடித்த விசாரணைகளுக்குப் பிறகு படகு மூலம் ஆட் கடத்தல் செய்யும் 5 ஆண்களை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி வந்த 132 படகுப் பயணங்களை இவர்கள் ஏற்பாடு செய்தவர்கள் அல்லது அது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஆப்கானியர்கள். ஒருவர் இரானியர். ஐந்தாவது நபர் பாகிஸ்தானியர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து அகதிப் படகுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, படகுகளில் வருபவர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் அகதித் தஞ்சம் ஏற்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

கைதுகள் தொடரும்

அகதிகளை ஏற்றி வரும் படகுகள் பல கடலில் முழ்கிவிடுகின்றனர். இதில் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்த கைது நடவடிக்கை காரணமாக, படகு மூலம் ஆட்கடத்தில் செய்யும் குற்றக் குழுவினருக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மேலும் கைதுகள் நடக்கும் என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை துணை ஆணையர் ஸ்டிவ் லான்காஸ்டர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர்கள் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.

ஏராளமான இலங்கைத் தமிழர்கள், பெரும் பணம் கொடுத்து இந்த ஆபத்தான படகுப் பயணத்தை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.