பிரிட்டிஷ் அரசியின் கணவர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி

பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப்புக்கு, இன்று ஒரு ஆராயுமுகமான அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

அவருக்கு அடி வயிற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்காக இந்த அறுவைச் சிகிச்சை நடக்கிறது.

வரும் திங்கட்கிழமையன்று 92 வயதை எட்டும் இளவரசர் பிலிப், மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் வரை தங்கவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அவர் கடந்த 18 மாதங்களில் நான்காவது முறையாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகிறார்.

ஆயினும், அரசி எலிசபெத் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வார்.

இன்னும் சில மணி நேரங்களில் அவர் லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் எமது பிபிசியின் தலைமை அலுவலகத்தையும் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

இளவரசர் பிலிப் நல்ல உற்சாகமான மனோநிலையில்தான் இருக்கிறார் என்றும் ஆனால், இது அரசி எலிசபெத்துக்கு ஒரு கவலை தரும் கால கட்டம் என்றும் பிபிசியின் அரச குடும்ப விவகாரங்களுக்கான செய்தியாளர் கூறுகிறார்.