வடகொரிய ஏவுகணைகள் "போலி"

வடகொரிய ஆயுத அணிவகுப்பு
பிரசுரிக்கப்பட்டது

வடகொரியா அண்மையில் நடத்திய ஆயுத அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகக் காட்டியவை போலி என்று ஜெர்மனியின் ஆயுத நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய அரசாங்கம் தலைநகர் பியாங்யாங்கில் இந்த மாதத்தில் முன்னதாக நடத்திய ஆயுத அணிவகுப்பு பல மேற்குலக நிபுணர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது, காரணம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வல்லமை கொண்டதாகவும், வேண்டுமான இடத்தில் கொண்டு சென்று வாகனத்தில் வைத்தே ஏவப்படக்கூடியது என்றும் கூறப்பட்ட ஆறு ஏவுகணைகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன என்பதுதான்.

இப்படி ஒரு ஆயுதத்தை வடகொரியா வெளிக்காட்டியது என்பது இதுவே முதல்முறை. வடகொரியர்கள் தமது ஏவுகணை திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேறியிருக்கிறார்கள் என்பதாக இது அமைந்திருந்தது.

ஆனால் இந்த ஆயுத அணிவகுப்பு வீடியோவைக் கொண்டு இந்த ஏவுகணைகளை உன்னிப்பாக ஆராய்ந்த ஜெர்மன் ஆயுத நிபுணர்களுக்கு இது நிஜ ஏவுகணைகள் அல்ல என்ற ஐயம் எழுந்துள்ளது.

அதாவது இந்த ஏவுகணைகள் எல்லாம் கவனமாக உருவாக்கப்பட்ட போலிகள் என்றும் நிஜத்தில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வல்லமை படைத்தவை அல்ல என்றும் மார்க்கஸ் ஸ்கில்லர், ராபர்ட் ஷ்மக்கர் ஆகிய இந்த இரண்டு நிபுணர்களும் வாதிடுகின்றனர்.

இந்த ஏவுகணைகளைப் பார்க்கும்போது அவற்றில் காணப்பட்ட பல அம்சங்கள் நிஜ ஏவுகணைக்குரிய அம்சங்களாக இல்லை என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆறு ஏவுகணைகள் இடையில் சிறுசிறு வித்தியாசங்கள் இருந்தன என்றும் அவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது அவற்றின் கட்டமைப்பிலும் வடிவமைப்பிலும் பெரிய கோளாறுகள் இருப்பதைக் காண முடிந்தாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

திரவ எரிபொருள், திட எரிபொருள் என்று இரண்டையுமே பயன்படுத்துவதற்குரிய வடிவமைப்பு அம்சங்கள் இந்த ஏவுகணைகளில் காணப்படுவதாகவும், இந்த ஏவுகணைகளில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளின் வடிவம் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டன என்றும் இவர்கள் சுட்டிக்காட்டினர்.

அணிவகுப்புகளி போலி ஆயுதங்களைக் காட்டுகிற வேலையை ஏதோ வடகொரியா மட்டும்தான் செய்கிறது என்றில்லை. கடந்த காலங்களில் வேறுபல நாடுகளும்கூட இப்படி போலி ஆயுதங்களைக் காட்டியிருந்தன என்று இந்த ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா கடந்த காலங்களிலும் போலி ஆயுதங்களை அணிவகுப்புகளில் காட்டியுள்ளது என்றும், ஆனால் அவர்கள் காட்டிய அந்த தொழில்நுட்பத்தை பிற்பாடு நிஜமாகவே அந்நாடு பெற்றதென்பதும் உண்டு என்றும் பிற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.